கடந்த மாதத்தில் ஒரு நாள், நம்முடைய சக செய்தியாளர்
நண்பரொருவருடன் அரசு மருத்துவமனை அருகே உரையாடிக்
கொண்டிருந்த ஒரு மாலைப் பொழுதில் ...
"இவங்ககிட்ட கேக்கலாமா, வேண்டாமா" என்ற
தயக்கத்தை முகத்தில் கொண்டு, நாகரீகமான தோற்றத்துடன்
அங்குமிங்கும் உலாவிக் கொண்டிருந்த வெளியூர் அன்பரொருவர்,
தயக்கத்தை விட்டொழித்து இறுதியில் கேட்டே விட்டார்,
"சார், யூரின் பாஸ் பண்ண இங்கே டாய்லெட் எங்கே இருக்கு?
இ..ங்...கே அந்த வசதி இல்லே, வாங்க என் ஆபிஸூக்கு,
அங்கிருக்கும் டாய்லெட்ட நீங்க யூஸ் பண்ணிக்கோங்க"
என்ற நமது சக செய்தியாளர் நண்பரின் அழைப்பிற்கு
நன்றி சொல்லிவிட்டு அப்போது வந்த 5A பஸ்ஸில் ஏறி
அவர் சிதம்பரம் நோக்கி சென்று விட்டார்.
பரங்கிப்பேட்டை மின்வாரிய அலுவலகத்திற்கு, மருத்துவமனைக்கு,
பத்திர பதிவு அலுவலகத்திற்கு வரும் கிராமத்து மக்களுடன்
பரங்கிப்பேட்டையின் தலைநகரத்துக்கு அவ்வப்போது வரும் உள்ளூர்
மக்களும் தங்களது அவசர தேவைகளுக்காக நீண்ட நெடுங்காலமாக
அரசு மருத்துவமனையை ஒட்டியுள்ள (நெல்லுக்கடை தெருவுக்கு செல்லும்
வழியான அந்த) சந்தை பயன்படுத்தி வந்ததால், அது "ஏகாம்பர ஆசாரி சந்து"
என்ற தனது சொந்த பெயரினை இழந்து, "மூத்திர சந்து" என்ற சோகப்பெயரினை
தாங்கி நிற்கின்றது.
சரி, இதற்கு தீர்வு தான் என்ன? என்ற வினாவுக்கு, அரசு மருத்துவமனையில்
அதன் இறுதி பகுதியில், அதாவது கச்சேரி தெருவின் மத்தியில் ஒரு கட்டண
கழிப்பறை அமைப்பதுடன் மட்டுமல்லாது, ஏகாம்பர ஆசாரி சந்தில் சிறுநீர்
கழிக்கக்கூடாது என்ற விழிப்புணர்வுடன் கூடிய எச்சரிக்கை பலகை அமைப்பது
தான் தீர்வாக அமையலாம். அப்போது தான் நம் எல்லோர் மனதில் இருக்கும்,
மேலும் கிரஸண்ட் நல்வாழ்வு சங்கமும், தனது ஐம்பெரும் விழாவில் பொதுமக்களுக்கு வேண்டுகோளாக விடுத்திட்ட "CLEAN PORTONOVO, GREEN PORTONOVO" என்ற கனவு கை வரப்பெறும்.
தொடர்புடைய அரசு துறை அதிகாரிகள் முயற்சி எடுப்பார்களா? என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.