வெள்ளி, 28 நவம்பர், 2008

குடம், குடமாய் தண்ணீர்.....



பொதுவாக மழைக்காலத்தில் வெள்ளம் தாழ்வான குடிசை பகுதிகளை நோக்கி பாய்வதும், சூழ்ந்து நின்று அழிவை தருவதுமே நாம் இதுவரை பார்த்து வந்த மழை., ஆனால் இந்த முறை அங்கிங்கெணாதபடி எங்கும் வெள்ளம் சூழ்ந்து நின்றது. இப்போதெல்லாம் வீடுகளுக்கு பரஸ்பரம் நலம் விசாரிக்க செல்லும் நம் பெண்கள் கேட்கும் கேள்விகளில், " உங்க வூட்லே எதுவரைக்கும் தண்ணி வந்துச்சி" என்கின்ற அளவுக்கு நடுத்தர குடும்பத்து மக்களும் பாதிக்கப்பட்டது இந்த மழையில் தான், நகரை நாம் வலம் வந்த போது குடம்-குடமாக தண்ணீரை தன் வீடுகளிலிருந்து வெளியேற்றிய ஓட்டு வீடுகளை (முற்றம் உள்ள வீடு) நம்மால் பார்க்க முடிந்தது.


அங்கிருந்து நகர்ந்து கிலூர் நபி பள்ளிக்கு சென்ற போது, இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் சார்பில் ஆறு சட்டியில் உணவு தயாரிக்கும் பணியும் தயாரான உணவு, பாக்கெட் இடும் பணியும் நடைப்பெற்று கொண்டிருந்தது. இப்பணிகளில் கிரஸண்ட் நல்வாழ்வு சங்கத்தினர் அதன் தலைவர் ஜாபர் சாதிக் தலைமையில் தீவிரமாக ஈடுப்பட்டு கொண்டிருந்தார்கள், பின்னர் நம்மிடையே பேசிய கிரஸண்ட் நல்வாழ்வு சங்க தலைவர் ஜாபர் சாதிக், வெள்ள நிவாரண பணிக்காக கிரஸண்ட் சார்பில் ரூ. 5000 இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்-திடம் வழங்கியிருக்கும் தகவலையும் சொன்னார். மனித நேயத்தினை வெளிப்படுத்தும் விதமாக கிளுர் நபி பள்ளியில் தயாரிக்கப்பட்ட உணவு பொட்டலங்கள் தெத்துக்கடை, வண்ணாரப்பாளையம் போன்ற மாற்று மத சகோதரர்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் சென்றது. பின்னர் அங்கிருந்து டில்லி சாஹிப் தர்கா வளாகம் சென்ற போது குடியிருப்பு பகுதிகள் தண்ணீரால் முழுமையாக சூழப்பட்டு தீவு போன்று காட்சியளித்தது வேதனையளிப்பதாக இருந்தது. பின்னர் அங்கிருந்து கிளம்பி கவுஸ் பள்ளி வளாக குடியிருப்பு பகுதிகளை , பார்வையிட்டு விட்டு ஹக்கா சாஹிப் தர்கா வளாக குடியிருப்பு பகுதிகளுக்கு சென்ற போது, நம் கண் முன்னே பழைய பள்ளிவாசல் அருகிலிருந்த ஓட்டு வீடு மேற்கூரை இடிந்தது. அல்லாஹ்வின் நல்லருளால் அந்த நேரத்தில் வீட்டினுள் யாரும் இல்லை. காதரியா பள்ளியில் மூன்று சட்டி உணவு ஹக்கா சாஹிப் தர்கா, கலிமா நகர், கவுஸ் பள்ளி வளாக குடியிருப்பு பகுதிகளுக்காக தயாரிக்கப்பட்டது.





இந்த மழையினை பயன்படுத்தி கொண்டு ஒரு லிட்டர் பால் கூடுதலாக ரூ நான்கு விலை வைத்து சிலரால் விற்கப்பட்ட கொடுமையும், மின்சார இல்லாத காரணத்தால் செல்போன் பேட்டரி ரீசார்ஜ் செய்ய ரூ பத்து கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டதும் வேதனை அளிப்பதாக இருந்த அதே தருணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், சஞ்சீவிராயர் கோயில் தெருவில் இலவசமாக பேட்டரி ரீசார்ஜ் செய்யப்படும் என்ற அறிவிப்பும், "எத்தனை கைலிய தான் ஈரமா ஆக்குறது" என்ற தாய்மார்களின் சற்று கண்டிப்பினையும் மீறி வெள்ள நிவாரணப் பணிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்ட இளைஞர்களின் செயல்பாடுகளும் மனதுக்கு ஆறுதலளிப்பதாக இருந்தது. பரங்கிப்பேட்டையில் இருக்கும் சிறு தொழில் வாய்ப்புகளில் ஒன்றான பரோட்டா இரு தினங்களாக இல்லாததும் ஒரு கடையில் கூட்ட சிரமத்தினை தவிர்க்க டோக்கன் சிஸ்டம் அமுல்படுத்தபட்டதும். நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்த காரணத்தால் சில வீடுகளில் கழிவறை தொட்டி நிரம்பியதால், உறவினர் வீடுகளுக்கு இடம் மாறியதும், இந்த மழையில் தான்.

கும்மத் பள்ளியில் சகோதரர்கள் மாலிக், ஜாக்கீர்(சுகை), ஜாக்கீர்(ஹல்வா), பாவுஜி,காலீத் ஆகியோர்களும், பரங்கிப்பேட்டை ஜமாஅத் (கூகுள் இணைய குழுமம்) சகோதரர்கள் அபுல்கலாம் ஆஜாத், செய்யது முஸ்தபா, ஹம்துன் அப்பாஸ் போன்றவர்களும் தேங்கியிருந்த தண்ணீரை அகற்றுவதினை கண்ட அந்த நேரத்தில் கும்மத்பள்ளி மீட்பு குழுவினர்களில் ஒருவரையோ அல்லது அவர்கள் சார்பாக வேறு யாரையுமோ அங்கே நம்மால் காண முடியாதது சற்று வருத்தத்தினை ஏற்படுத்தியது. இது குறித்து ஒரு சகோதரரிடம் நமது செய்தியாளர் பேசியபோது, " நாங்க அங்கே வந்தால் தகராறு ஏற்படும் அதனால தான் வரலே" என்ற பதிலுக்கு நமது செய்தியாளர் "சரி நீங்க வரல, உங்க மூலமா யாரையாவது அனுப்பி இருக்கலாமே" என்று வினவியதற்கு அவரிடமிருந்து நமக்கு மவுனமே பதிலாக கிடைத்தது. எது எப்படியோ அல்லாஹ்-வின் பள்ளியில் வியாழன் அன்று இஷா தொழுகை நடைப்பெற்றது

திருமணத் தகவல்

வாத்தியாப்பள்ளி தெரு பஷீர் அஹமது அவர்களின் குமாரர் ஹமீது அப்துல் காதர் என்ற மணாளருக்கும், கோட்டத்தாங்கரை தெரு கலிமுல்லாஹ் அவர்களின் குமாரத்தி காமிலா ஃபர்வீன் என்கின்ற மணாளிக்கும் 27.11.2008 அன்று ஷாதி மஹாலில் திருமணம் நடைப்பெற்றது

இறப்புத் தகவல்

காஜியார் தெருவில் மர்ஹூம் டவுன் காஜி ஜெய்னுல் ஹக் ஹக்கானி சாஹிப் அவர்களின் பேரனும், மர்ஹூம் காஜி கபீர் கான் சாஹிப் மற்றும் ஜியாவுல் ஹக் சாஹிப் ஆகியோர்களின் மைத்துனர் செயய்த் ஹமீதுதீன் அவர்களின் மகனுமாகிய செய்யத் சஜ்ஜாத் அஹம்மது அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் நாளை காலை 9 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

இறப்புத் தகவல்

பண்டக சாலை தெருவில், மர்ஹூம் அப்துல் லத்தீப் அவர்களின் மனைவியும், தமீமுல் அன்சாரி, பஷீர் அஹம்மது, பாரூக் (பாபு) ஆகியோர்களின் தாயாரும், செய்யது சாஹிப், நவாப்ஜான், ஜாபர், பதுருதீன்(சேட்டு) ஆகியோர்களின் மாமியாருமாகிய முஹம்மதா பிவீ மர்ஹூம் ஆகி விட்டார்கள், 26/11/2008 அன்று 4 மணிக்கு மீராப்பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

கடும் மழையின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இந்த பதிவு தாமதமாக இன்று பதிவு செய்யப்படுகின்றது