ஞாயிறு, 18 ஜனவரி, 2009

இந்நாள்... ஒரு பொன்னாள்..!!!

பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10.25 மணியளவில் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியில் நடைப்பெற்றது. கூட்டத்தை தலைமையேற்று நடத்தி தருமாறு தலைவரை ஜமாஅத் செயலாளர்களில் ஒருவரான ஜனாப் பாவாஜான் அழைக்க அதை ஜனாப் ஆரிப் வழிமொழிந்தார்.

ஹாஜி.அப்துல் சமது ரசாதியின் கிராஅத்-துடன் தொடங்கிய பொதுக்குழுவில் ஜமாஅத் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் முடிவடைய இருப்பதால் புதிய தலைவரையும் நிர்வாக கமிட்டியையும் அமைக்க வேண்டிய அவசியத்தை தலைவர் எடுத்துரைத்தார்.

அதன்பிறகு மூத்த துணை தலைவர் ஜனாப் இஷாக் மரைக்காயர், வெளிநாட்டில் வசிக்கும் நமதூரைச் சேர்ந்த முஸ்லிம் சகோதரர்களுக்கு ஓட்டுரிமை வழங்குவதற்காக பைலாவில் திருத்தம் செய்யப்பட்டதை வாசித்து காண்பித்தார்

பிறகு செயலாளர் பாவாஜான் எழுந்து தேர்தல் தொடர்பாக மக்கள் கருத்துகளை ஒலிப்பெருக்கி முன் வந்து சொல்லலாம் என கூறினார்.அதன்பிறகு மீ.மெ.மீரா ஹூஸைன் எழுந்து தலைவரை மக்கள் தேர்ந்தெடுத்தாலும், நிர்வாக கமிட்டியை தலைவர் தான் தேர்ந்தெடுக்கவேண்டும் அப்போதுதான் நிர்வாகம் நல்லமுறையில்அமையும் என்ற தனது கருத்தினை பதிவுசெய்தார்

அதன்பிறகு கருத்துசொல்ல வந்த கோட்டாத்தாங்கரை தெருவை சேர்ந்த சேட்டு என்பவர் தலைவரையும், அதனுடன் சேர்ந்து, நிர்வாகமைப்பையும் பொதுமக்கள் தான் தேர்ந்து எடுக்கவேண்டும் என கூறி தனது கருத்தை பதிவு செய்தார், அதற்கு பின்னர் முன்னாள் கவுன்சிலர் அப்துல் லத்தீப் எழுந்து ஏதோ சொல்ல வர, ஜமாஅத் செயலாளர் பாவாஜான் எழுந்து தாங்கள் வேறு ஒரு அமைப்பில் இருப்பதால் தங்களுக்கு கருத்துரிமையில்லை, தாங்கள் பார்வையாளராக மட்டுமே இருங்கள் என சொல்ல போட்டி ஜமாஅத்தை சேர்ந்தவர்கள் பாவாஜானை நோக்கி ஒடினார்கள் ஒரே கூச்சல்குழப்பமாக நீடித்து சிறுது நேரத்திற்கு பின் அமைதி திரும்பியது. அதன்பிறகு தலைவர் ஏதோ சொல்ல மீண்டும் கூச்சல் குழப்பம் எற்பட்டது உடனே மைக்-கை பிடித்த மவ்லவி அப்துல் காதர் மதனி அல்லாஹ்வின் வீட்டில் கண்ணியத்தை காக்கவேண்டியதின் அவசியத்தை சிறு பயானாக எடுத்துச்சொல்ல அதில் பலன் இருந்தது, கூட்டம் அமைதியாகியது.

தலைவர் எழுந்து தனக்கு ஊர் ஒற்றுமை தான் தேவை, அதனால் தான் பதவிக்கு வர விரும்பவில்லை அவர்கள் (போட்டி ஜமாஅத்) தங்களின் அமைப்பை கலைத்துவிட்டுவேண்டுமானால் பதவிக்கு வரட்டும் எனசொல்ல அந்த ஜமாஅத் தலைவரான ஜனாப் ஹமித்கவுஸ் மைக் முன் வந்து நாங்கள் அந்த அமைப்பை கலைத்துவிட்டோம் என சொல்ல"அல்லாஹு அக்பர்" கரகோஷம் எழுந்து அடங்கியது. இரண்டு அமைப்பைசேர்ந்தவர்களும் ஆரத்தழுவி ஸலாம் சொல்லிக்கொண்டார்கள். தேர்தல் சம்பந்தமாக வரும்நாட்களில் அறிவிப்பு செய்யப்படும் என்கின்ற அறிவிப்புடன் பொதுக்குழு முடிந்தது.
கடந்த சில நாட்களாகவே, மிகுந்த பரப்பரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த பொதுக்குழுவில், எல்லோரும் ஒற்றுமையானதன் மூலம் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகவும் அமைந்திட்டது எனலாம்

எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே..!!!


கட்டுரையாளர்: ஹம்துன் அஷ்ரப்

செவ்வாய், 13 ஜனவரி, 2009

தலைநகரத்தில், ஓரு தேவை...

கடந்த மாதத்தில் ஒரு நாள், நம்முடைய சக செய்தியாளர்
நண்பரொருவருடன் அரசு மருத்துவமனை அருகே உரையாடிக்
கொண்டிருந்த ஒரு மாலைப் பொழுதில் ...

"இவங்ககிட்ட கேக்கலாமா, வேண்டாமா" என்ற
தயக்கத்தை முகத்தில் கொண்டு, நாகரீகமான தோற்றத்துடன்
அங்குமிங்கும் உலாவிக் கொண்டிருந்த வெளியூர் அன்பரொருவர்,
தயக்கத்தை விட்டொழித்து இறுதியில் கேட்டே விட்டார்,

"சார், யூரின் பாஸ் பண்ண இங்கே டாய்லெட் எங்கே இருக்கு?

இ..ங்...கே அந்த வசதி இல்லே, வாங்க என் ஆபிஸூக்கு,
அங்கிருக்கும் டாய்லெட்ட நீங்க யூஸ் பண்ணிக்கோங்க"

என்ற நமது சக செய்தியாளர் நண்பரின் அழைப்பிற்கு
நன்றி சொல்லிவிட்டு அப்போது வந்த 5A பஸ்ஸில் ஏறி
அவர் சிதம்பரம் நோக்கி சென்று விட்டார்.

பரங்கிப்பேட்டை மின்வாரிய அலுவலகத்திற்கு, மருத்துவமனைக்கு,
பத்திர பதிவு அலுவலகத்திற்கு வரும் கிராமத்து மக்களுடன்
பரங்கிப்பேட்டையின் தலைநகரத்துக்கு அவ்வப்போது வரும் உள்ளூர்
மக்களும் தங்களது அவசர தேவைகளுக்காக நீண்ட நெடுங்காலமாக
அரசு மருத்துவமனையை ஒட்டியுள்ள (நெல்லுக்கடை தெருவுக்கு செல்லும்
வழியான அந்த) சந்தை பயன்படுத்தி வந்ததால், அது "ஏகாம்பர ஆசாரி சந்து"
என்ற தனது சொந்த பெயரினை இழந்து, "மூத்திர சந்து" என்ற சோகப்பெயரினை
தாங்கி நிற்கின்றது.

சரி, இதற்கு தீர்வு தான் என்ன? என்ற வினாவுக்கு, அரசு மருத்துவமனையில்
அதன் இறுதி பகுதியில், அதாவது கச்சேரி தெருவின் மத்தியில் ஒரு கட்டண
கழிப்பறை அமைப்பதுடன் மட்டுமல்லாது, ஏகாம்பர ஆசாரி சந்தில் சிறுநீர்
கழிக்கக்கூடாது என்ற விழிப்புணர்வுடன் கூடிய எச்சரிக்கை பலகை அமைப்பது
தான் தீர்வாக அமையலாம். அப்போது தான் நம் எல்லோர் மனதில் இருக்கும்,
மேலும் கிரஸண்ட் நல்வாழ்வு சங்கமும், தனது ஐம்பெரும் விழாவில் பொதுமக்களுக்கு வேண்டுகோளாக விடுத்திட்ட "CLEAN PORTONOVO, GREEN PORTONOVO" என்ற கனவு கை வரப்பெறும்.

தொடர்புடைய அரசு துறை அதிகாரிகள் முயற்சி எடுப்பார்களா? என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.



வியாழன், 8 ஜனவரி, 2009

காத்திருப்பில் கரையும் காலங்கள் ...

"பாகர் சதுக்கம்" ! என்ன இது என்று வியப்பில் நெற்றியை சுருக்கும் தங்களிடம், B.முட்லூர் பஸ் நிறுத்தம் தான் அது என்று சொன்னால் விளங்கிக்கொள்வீர்கள். சற்றேறக்குறைய பத்தாண்டுகளுக்கு பின்னர் நேரில் சந்தித்த நாகூர் நண்பரொருவர் பொட்டிலறைந்தாற்போல் கேட்டார், " இப்பவும் முட்லூர்லே தான் பஸ்ஸுக்காக காத்து கெடக்குறிங்களா"?.
பதில் சொல்லஇயலவில்லை.

ஊர் பொது நலன் அமைப்புகளால் அவ்வப்போது வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் முறையிடப்படுவதும், கண்துடைப்பாக அனைத்துப் பேருந்துகளும் பரங்கிப்பேட்டை வழியாக ஓரிரு நாட்கள் வந்து காவல்நிலையத்தில் வந்து கையெழுத்திட்டு செல்வதும் வாடிக்கை நிகழ்வாகி விட்ட ஒன்று.

தமிழகத்தின் எந்த பேரூராட்சிகளிலும் இல்லாத அளவுக்கு,ஊராட்சி ஒன்றியம்,பேரூராட்சி, மாவட்ட குற்றவியல் மற்றும் நீதித்துறைநடுவர் நீதிமன்றம்,தொடர்வண்டி நிலையம்,கிளைச் சிறை, சுங்க அலுவலகம்,காவல் நிலையம், இரு அஞ்சலகங்கள் பொதுப்பணித்துறை, கால்நடை மருத்துவமனை, அரசு பொதுமருத்துவமனை, மின்சார வாரியம், வேளாண்மைஅலுவலகம், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை வங்கி, அண்ணாமலை பல்கலைகழகத்தின் கடல்வாழ் உயிரின ஆராய்ச்சிஉயராய்வு மையம்,தொலைத்தொடர்பு துறை, பத்திரப்பதிவு துறை,மீன்வளத் துறை, உப்பு துறை,கப்பல் போக்குவரத்து துறை, தீயணைப்பு நிலையம்,உயர்நிலை,மேல்நிலை,ஆரம்ப பள்ளிகள்,நூலகம் மற்றும் ஏராளமான தனியார் கல்விநிறுவனங்கள்,இந்துஸ்தான் கேஸ், இப்படி அதிகமான அரசுத்துறை அலுவலகங்கள்நிரம்பப்பெற்றிருந்தும் பரங்கிப்பேட்டைக்கு போக்குவரத்து என்பது அந்தோ பரிதாபம்.

பரங்கிப்பேட்டைக்கு வந்து-செல்ல வேண்டுமென்ற உரிமம் பெற்றும் வர மறுக்கும் பேருந்துகளின் அலட்சியம் எதனை நமக்கு உணர்த்துகின்றது, அரசுத் துறையானவட்டார போக்குவரத்து துறையின் பொறுப்பற்ற தன்மையையா? அல்லது பரங்கிப்பேட்டையை பொறுத்த வரைக்கும் தட்டி கேட்க ஆளில்லை என்ற மானப் போக்கையா? காலம் மாறி வருகிறது..... இருந்தும் (பேருந்துக்கான) காத்திருப்புகள் மாறியதாகத் தெரியவில்லை.

எண்ணமும் கருத்தும்: ஹம்துன் அப்பாஸ்
நன்றி: http://www.mypno.com/