ஞாயிறு, 18 ஜனவரி, 2009

இந்நாள்... ஒரு பொன்னாள்..!!!

பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10.25 மணியளவில் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியில் நடைப்பெற்றது. கூட்டத்தை தலைமையேற்று நடத்தி தருமாறு தலைவரை ஜமாஅத் செயலாளர்களில் ஒருவரான ஜனாப் பாவாஜான் அழைக்க அதை ஜனாப் ஆரிப் வழிமொழிந்தார்.

ஹாஜி.அப்துல் சமது ரசாதியின் கிராஅத்-துடன் தொடங்கிய பொதுக்குழுவில் ஜமாஅத் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் முடிவடைய இருப்பதால் புதிய தலைவரையும் நிர்வாக கமிட்டியையும் அமைக்க வேண்டிய அவசியத்தை தலைவர் எடுத்துரைத்தார்.

அதன்பிறகு மூத்த துணை தலைவர் ஜனாப் இஷாக் மரைக்காயர், வெளிநாட்டில் வசிக்கும் நமதூரைச் சேர்ந்த முஸ்லிம் சகோதரர்களுக்கு ஓட்டுரிமை வழங்குவதற்காக பைலாவில் திருத்தம் செய்யப்பட்டதை வாசித்து காண்பித்தார்

பிறகு செயலாளர் பாவாஜான் எழுந்து தேர்தல் தொடர்பாக மக்கள் கருத்துகளை ஒலிப்பெருக்கி முன் வந்து சொல்லலாம் என கூறினார்.அதன்பிறகு மீ.மெ.மீரா ஹூஸைன் எழுந்து தலைவரை மக்கள் தேர்ந்தெடுத்தாலும், நிர்வாக கமிட்டியை தலைவர் தான் தேர்ந்தெடுக்கவேண்டும் அப்போதுதான் நிர்வாகம் நல்லமுறையில்அமையும் என்ற தனது கருத்தினை பதிவுசெய்தார்

அதன்பிறகு கருத்துசொல்ல வந்த கோட்டாத்தாங்கரை தெருவை சேர்ந்த சேட்டு என்பவர் தலைவரையும், அதனுடன் சேர்ந்து, நிர்வாகமைப்பையும் பொதுமக்கள் தான் தேர்ந்து எடுக்கவேண்டும் என கூறி தனது கருத்தை பதிவு செய்தார், அதற்கு பின்னர் முன்னாள் கவுன்சிலர் அப்துல் லத்தீப் எழுந்து ஏதோ சொல்ல வர, ஜமாஅத் செயலாளர் பாவாஜான் எழுந்து தாங்கள் வேறு ஒரு அமைப்பில் இருப்பதால் தங்களுக்கு கருத்துரிமையில்லை, தாங்கள் பார்வையாளராக மட்டுமே இருங்கள் என சொல்ல போட்டி ஜமாஅத்தை சேர்ந்தவர்கள் பாவாஜானை நோக்கி ஒடினார்கள் ஒரே கூச்சல்குழப்பமாக நீடித்து சிறுது நேரத்திற்கு பின் அமைதி திரும்பியது. அதன்பிறகு தலைவர் ஏதோ சொல்ல மீண்டும் கூச்சல் குழப்பம் எற்பட்டது உடனே மைக்-கை பிடித்த மவ்லவி அப்துல் காதர் மதனி அல்லாஹ்வின் வீட்டில் கண்ணியத்தை காக்கவேண்டியதின் அவசியத்தை சிறு பயானாக எடுத்துச்சொல்ல அதில் பலன் இருந்தது, கூட்டம் அமைதியாகியது.

தலைவர் எழுந்து தனக்கு ஊர் ஒற்றுமை தான் தேவை, அதனால் தான் பதவிக்கு வர விரும்பவில்லை அவர்கள் (போட்டி ஜமாஅத்) தங்களின் அமைப்பை கலைத்துவிட்டுவேண்டுமானால் பதவிக்கு வரட்டும் எனசொல்ல அந்த ஜமாஅத் தலைவரான ஜனாப் ஹமித்கவுஸ் மைக் முன் வந்து நாங்கள் அந்த அமைப்பை கலைத்துவிட்டோம் என சொல்ல"அல்லாஹு அக்பர்" கரகோஷம் எழுந்து அடங்கியது. இரண்டு அமைப்பைசேர்ந்தவர்களும் ஆரத்தழுவி ஸலாம் சொல்லிக்கொண்டார்கள். தேர்தல் சம்பந்தமாக வரும்நாட்களில் அறிவிப்பு செய்யப்படும் என்கின்ற அறிவிப்புடன் பொதுக்குழு முடிந்தது.
கடந்த சில நாட்களாகவே, மிகுந்த பரப்பரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த பொதுக்குழுவில், எல்லோரும் ஒற்றுமையானதன் மூலம் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகவும் அமைந்திட்டது எனலாம்

எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே..!!!


கட்டுரையாளர்: ஹம்துன் அஷ்ரப்

கருத்துகள் இல்லை: